இந்துசமயம்

வாழ்க்கை என்பதும் ஒரு நதியைப் போலத் தான்!

Go down

வாழ்க்கை என்பதும் ஒரு நதியைப் போலத் தான்! Empty வாழ்க்கை என்பதும் ஒரு நதியைப் போலத் தான்!

Post by Admin on Sat Oct 24, 2009 4:54 pm

வாழ்க்கை என்பதும் ஒரு நதியைப் போலத் தான்!

சில இடங்களில் காட்டாறாகப் பெருகிப் பாய்வதும், சில இடங்களில் சலனமே இல்லாமல் பரந்து ஓடுவதும், ஒரு சில இடங்களில் அந்தர்வாஹிநியாக பூமிக்கடியில், அடிநீரோட்டமாகப் பயணிப்பதும், வெளியில் இருந்து பார்க்கும் போது, ஒரு திட்டமோ ஒழுங்கோ இல்லாமல் தாறுமாறாகப் போய்க் கொண்டிருப்பது போலத் தோன்றினாலும், நதியின் ஓட்டம், கடலைத் தேடி அடையும் வரை ஓய்வதே இல்லை. நதியின் பயணத்தைக் கவனிக்கும் போது தான், நாமும் நதியைப் போலவே, நமக்குத் தெரிந்தாலும் சரி, தெரியாவிட்டாலும் சரி, ஒரு இலக்கைத் தேடித் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

பயணம் செய்வதும், அதற்கு ஒரு இலக்கு இருப்பதும் தெரிய வரவே ஏராளமான நேரத்தை வீணடிப்பவர்களும் உண்டு. பாதைகள் மாறி மாறி வருவதையும் அதில் எதைத் தேர்ந்தெடுப்பது என்ற குழப்பங்களிலும் இன்னும் கொஞ்சம் காலம் விரயமாகும். ஏதோ ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்துப் பயணிக்கும் போது, சரியானபாதையில் தான் போய்க்கொண்டிருக்கிறோமா என்ற சந்தேகம் வேறு, நம்மைப் பாடாய்ப் படுத்தும். இத்தனை அவஸ்தைகளைப் பட்டுக் கொண்டிருக்கும் போதே, இதெல்லாம் வெறும் கனவு தான் என்ற மாதிரி மயக்கமும் வரும். பாதைகள், பயணம், நாம் இப்படி எதுவுமே இல்லை, எல்லாம் வெறும் மாயை தான் என்று கூடத் தோன்றும்.

ஆனால், காலச் சக்கரம் சுழலும் போது, இந்த மாதிரிக்கனவுகளையும் மீறி, நம்மை ஏதோ ஒன்று உந்தித் தள்ளிக் கொண்டிருப்பதையும், நம்முடைய சம்மதம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், அதன் சித்தப் படியே நம்மை வழிநடத்திக் கொண்டிருப்பதையும், நம்மால் உணர முடியும்.

'இதெல்லாம் சுத்த ஹம்பக். என்னுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்தையும் நானே, எனது சுய விருப்பத்தின் பேரில் முடிவு செய்து கொள்கிறேன். எனக்கு மேலே ஒரு சக்தி இருக்கிறது என்பதையோ, அது தான் என்னுடைய வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது என்பதையோ ஒருபோதும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. ' என்று தோன்றுகிறதா? அப்படியும் ஒரு பாதை இருக்கிறது.

உடனே நாத்திகப் பாதை என்ற முடிவுக்கு வந்துவிட வேண்டாம்! இது இல்லை, இது இல்லை என்று ஒன்றொன்றாகக் கழித்துக் கொண்டே வந்து, கழிக்க முடியாத ஒன்றில் வந்து சேருகிற ஒரு பாதை. நேதி, நேதி , இது இல்லை, இது இல்லை என்று பொய்மையைக் கண்டுபிடித்துக் கழிக்கும், பகுத்தறிவுப் பாதை.

இங்கே நாம் பார்த்துக் கொண்டிருக்கிற, இன்றைய நாத்திகம் சரக்கு இல்லாத வெறும் காலிப் பாத்திரம். கட முடவெனப் பெருத்த சத்தத்தை மட்டும் தான் அதனால் எழுப்ப முடியும்!

இப்படி காலிப் பாத்திரம் ஒன்றின் கதையைப் பார்ப்போமா?

சோழ மன்னனின் அபிமானத்திற்குரிய பண்டிதர் அவர். நிறையக் கற்றவர்.
இருப்பதை இல்லையென்றும், இல்லை என்பதை இருப்பதாகவும் வாதத்தில் நிலைநாட்டும் வல்லமை படைத்தவர். எதிர்த்து வாது செய்ய வரும் அனைவரையும் தோற்கடித்து, மன்னனின் விருதுகளைப் பெற்றவர். ஆக்கி ஆழ்வான் என்றும் வித்வத்ஜன கோலாகலர் என்றும் அறியப்பட்ட மிகப் பிரபலமான தர்க்க சாஸ்திரி. நம்ம ஊர் பட்டிமன்றப் பேச்சாளர் மாதிரி என்று வைத்துக் கொள்ளுங்களேன்! என்ன சாத்திரம் கற்றவனிடம் கொஞ்சம் சரக்கு அதிகம் இருக்கும். அது ஒன்று தான் வித்தியாசம்., பட்டிமன்றத்தில் பேச அதெல்லாம் தேவையில்லை!

இவரை எதிர்த்து வெல்ல முடியாது என்ற செய்தி மெல்ல மெல்லப் பரவி இவருடன் வாது செய்ய வருபவர்களே இல்லை என்றாகிப் போனது.
சொறி பிடித்தவன் கையும், வாதம் செய்தே பழகிப் போனவன் நாக்கும் சும்மா இருக்குமா என்ன?
இவரே ஊர் ஊராக ஆட்களை அனுப்பி, அங்கே
இருக்கும் பண்டிதர்களை எல்லாம் வாதுக்கு வா இல்லை என்றால் தோல்வியை
ஒப்புக் கொண்டு எழுதிக் கொடுத்து விட்டுப் பிழைத்துப் போ என்று விரட்டுகிற
அளவுக்கு தலைக் கனம், புகழ் கொடுத்த போதை, மன்னனின் ஆதரவு எல்லாம் சேர்ந்து ஆக்கி வைத்து விட்டது. அப்படி ஆனதனாலேயே ஆக்கியாழ்வான் என ஆனாரோ என்னவோ!
இப்படியாக, ஒரு நாள் ஆக்கியாழ்வான் அனுப்பிய ஆட்கள், மகாபாஷ்ய பட்டர் என்பவர் வீட்டு வாசல் கதவைத் தட்டுகிறார்கள். வாசலில் பன்னிரண்டே வயதான சிறுவன் ஒருவன் பாடம் படித்துக் கொண்டிருக்கிறான்.

"மகாபாஷ்ய பட்டர் எங்கே?"

"அவர் வெளியே சென்றிருக்கிறார். வந்த காரியத்தைக் கூறுங்கள்"

"சோழ மன்னன் அரசவைப் பண்டிதர் ஆக்கியாழ்வான், மகாபாஷ்ய பட்டரை வாதுக்கு அழைக்கிறார். அரசவைக்கு வந்து வாதம் புரியத் தயாரா என்று சவால் விடுத்திருக்கிறார்.
சவாலை ஏற்கத் தைரியம் இல்லை என்றால், அதை ஒப்புக் கொண்டு பட்டயம் எழுதிக் கொடுத்துவிட்டு, அவர் காலில் விழ வேண்டும் என்று அறைகூவல் விடுத்திருக்கிறார்."

இப்படிச் சொன்ன வீரர்களைப் பார்த்து அந்த சிறுவன் அலட்சியமாகச் சொல்கிறான்:

"ஆக்கியாழ்வானோடு வாதம் புரிய என்னுடைய குரு தான் வர வேண்டுமோ? நானே போதுமே. ஆக்கியாழ்வானோடு வாதம் புரிய மகாபாஷ்ய பட்டருடைய சீடன் வருகிறேன் என்று போய்ச் சொல்லுங்கள்!"

ஆக்கியாழ்வான் அழைப்பையும், சீடன் அதை அலட்சியமாக எதிர்கொண்டதையும் அறிந்து மகாபாஷ்ய பட்டர் கவலைப் படுகிறார். சீடன், தன்னம்பிக்கையோடு குருவைத் தேற்றுகிறான். அரசனுடைய ஆட்கள் மறுபடி வருகிறார்கள், அரசவைப் பண்டிதனுக்குச் சமமாக உரிய மரியாதைகளோடு வந்து அழைத்துப் போங்கள் என்று அந்த சிறுவன் சொன்ன படியே, பல்லக்கு, விருதுகளோடு அழைத்துப் போகிறார்கள்.

பால்மணம் மாறா பாலகனைக் கண்டதும் அரசிக்கு இனம் புரியாத வாஞ்சை. அரசனோ ஏளனமாகப் பார்க்கிறான். "ஆள் வந்தானோ?" என்று கேட்ட ஆக்கியாழ்வானுக்கு "ஆள வந்தார்" என்று சொன்ன அரசியிடம், மன்னன் கேலி பேசுகிறான்.

"இந்தச் சிறுவன் நம் ஆக்கியாழ்வானை வென்று விடுவான் என நம்புகிறாய் போலிருக்கிறதே?!"

"நிச்சயமாக. என்ன பந்தயம்வைக்கிறீர்கள்?"

"இந்தச் சிறுவன் வென்றால், நம்முடைய அரசில் பாதியை அவன் அரசாளக் கொடுத்து விடுகிறேன். மாறாகத் தோற்று விட்டால், நீ என்ன செய்வாய்?"

"என்னுடைய அரசி அந்தஸ்தை விட்டு விட்டு, வெறும் சேவகப் பெண்ணாக இருந்து விடுகிறேன்!" என்கிறாள் அரசி. ஆக்கியாழ்வானுடைய திறமையில் அரசனுக்கு அவ்வளவு நம்பிக்கை. அரசிக்கோ, பால்மணம் மாறாத அந்தச் சிறுவன் வடிவில் ஆயர்பாடிச் சிறுவனே வந்திருக்கிறான், நம்மையும் ஆள வந்தான் என்கிற பெருமிதம். வாதப் போர் ஆரம்பமாகிறது.

சிறுவனைக் கண்டதும் ஆக்கியாழ்வானுக்கு ஏளனமாக இருந்தது. பாலகன் இவன், இவனுக்கு என்ன தெரிந்திருக்கப் போகிறது என்றே அலட்சியமாக, மிக மிகச் சாதாரணமான கேள்விகளை கேட்க ஆரம்பிக்கிறான். சிறு நெருப்புப் பொறி தான்! பஞ்சுப்பொதி மொத்தத்தையும் சுட்டு நீறாக்கிவிடும் என்பது அவனுக்குத் தெரியவில்லை!

கேள்விகளுக்கெல்லாம் அலட்சியமாகப் பதில் சொல்லிக் கொண்டிருந்த சிறுவனிடம் ஆக்கியாழ்வான் செருக்கோடு கூவுகிறான்:

"அடேய் பிள்ளாய்! நீ எது இருக்கிறதென்று சொன்னாலும் அதை இல்லை என்றாக்கிக் காட்டுவேன். எதை இல்லை என்று சொன்னாலும், அது இருக்கிறதென்று ஆக்கிக் காட்டுவேன்! போனால் போகிறது, இப்பொழுதாவது தோல்வியை ஒப்புக் கொண்டு ஓடிப்பிழைத்துப் போ!"

சிறுவன் அதை சட்டை செய்யவே இல்லை. எள்ளி நகையாடியபடியே சொல்கிறான்:

"சிறுபையனென்று அவ்வளவு ஏளனமோ? எங்கே, உம்முடைய ஜாலத்தைப் பார்க்கலாம்!

ஒன்று, இந்த அரசன் சார்வ பௌமன், புண்ணியன்!
இரண்டு, இந்த அரசி பதிவிரதை!
மூன்று, உம் தாய் மலடி!

இந்த மூன்றை இல்லை என்று ஆக்கிக் காட்டும் பார்க்கலாம்!"

அதுவரை எல்லோரையும் மிரட்டிக் கொண்டிருந்த ஆக்கியாழ்வான், மிரண்டு நிற்கிறான். என்னவென்று சொல்வது?

இத்தனை நாள் ஆதரவளித்த அரசனை, நீ சார்வ பௌமன் இல்லை, புண்ணியம் செய்தவன் இல்லை என்று எப்படிச் சொல்வது? அது போகட்டும், அரசி பதிவிரதை இல்லை என்று எப்படிச் சொல்வது? அதுகூடப் போய்த் தொலையட்டும், பிள்ளை பெறாதவளைத் தான் மலடி என்று சொல்வார்கள், என்னைப் பெற்றவளை எப்படி மலடி என்று சொல்வது?

எதையாவது சொல்ல அனர்த்தமாகிக் கழுத்துக்கே சுருக்கு வந்து விடுமே!
தவிர, உப்பிட்டவனைப் பற்றி மாற்றிப் பேசினால் நன்றி மறந்த பாவமும் வந்து சேருமே!
விழிக்கிறான், விழிக்கிறான் விழித்துக் கொண்டேயிருந்தான்!பிரம்மாண்டமான பலூன் தான், ஒரு சிறு ஊசி குத்தினால் கூட காற்று புஸ்ஸ்..என்று வெளியேற, பிரம்மாண்டம் தொலைந்து விடுமே! ஆக்கியாழ்வான் கதையும், அப்படிக் காற்றுப் போன பலூன் மாதிரித் தான் இருந்தது. தோற்றேனென்று சொல்லக் கூடத் தெம்பு இல்லாமல்,பரிதாபமாக, அரசனைப் பார்க்கிறான்.

அரசன் கொஞ்சம் புத்திசாலி. வெறும் பார்வையாளனாக மட்டுமே இருந்து, கைதட்டி ரசித்தவன் என்பதால், ஆக்கியாழ்வானிடமிருந்த சரக்கு ஒன்றுமேயில்லை, வெறும் வாதத்திறமையினால், வசனம் எழுதி ஆட்சிக் கட்டிலைப் பிடிப்பது போல, இத்தனை நாள் ஜம்பமடித்துக் கொண்டிருந்திருக்கிறான் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. அதிலிருந்து விலகி, ஒரு தீர்மானத்திற்கும் வர முடிந்தது. ஆனாலும், அரசியிடம் இட்ட பந்தயத்தில் தோற்றுக் கொண்டிருக்கிறோம் என்பது உறைக்கவே, சிறுவனிடம் கேட்கிறான்:

"சிறுவனே! ஆக்கியாழ்வான் தோற்றுவிட்டதென்னவோ உண்மை! ஆனால், நீ எழுப்பிய வினாக்களுக்கு, தர்க்க ரீதியாக சரியான சமாதானம் சொல்ல முடிந்தால், நீயே வெற்றி பெற்றவன், சொல்ல முடியுமா?"

"ஏன் முடியாது? இதோ சொல்கிறேன். முதலில், இந்த அரசன் சார்வபௌமன், புண்ணியம் செய்தவன் இல்லை என்பது எப்படி சரியாக இருக்கும் என்றால், சார்வ பௌமன் என்பது இந்த உலகம் முழுவதையும் ஒரே குடைக் கீழ் ஆட்சி செய்வது, இங்கே நீங்கள் உலகம் முழுமைக்கும் அரசன் அல்ல. அதனால் சார்வபௌமன் அல்ல. அதே மாதிரி, குடிமக்கள் செய்கிற பாவங்களும் அரசனையே போய்ச் சேரும் என்று தர்ம சாஸ்திரம் சொல்கிறது. அதன்படி புண்ணியனும் அல்ல.

இரண்டாவதாக, அரசி பதிவ்ரதை அல்ல என்பது. கன்னிகாதானம் செய்யும் போது, முதலில் இந்திரன் முதலான தேவர்களுக்கு தானம் செய்து கொடுக்கப்பட்ட பிறகே, அவர்கள் மூலமாகவே உமக்கு தானமாக, துணைவியாகக் கொடுக்கப் படுகிறாள். அதனால், அரசியைப் பத்தினி என்றும் கொள்ள முடியாது.

மூன்றாவதாக, ஆக்கியாழ்வான், அவருடைய தாய்க்கு ஒரே மகன். ஒரே பிள்ளையை மட்டும் பெற்றவள், தர்ம சாஸ்திரத்தின் படி மலடி என்றே கருதப் படுகிறாள். அதன்படிக்கும், நல்ல பிள்ளையை பெறாதவள், பெற்றும் பெறாததற்குச் சமம் என்பதற்கேற்ப, சாத்திரங்கள் பல கற்றிருந்தாலும் அதன் படி நடக்கத் தெரியாமல், இப்படி வெற்று வாதங்களிலேயே காலத்தைக் கழிப்பவர் நல்ல பிள்ளையாக இருக்க முடியாது என்பதாலும், இவரை பெற்றும், நல்ல பிள்ளையைப் பெறாத மலடியாக இவர் தாய் ஆகிப் போனாள்!"

அரசன் தான் வாக்களித்தபடியே, பாதி ராஜ்யத்தை அவருக்கு அளித்தான் என்பதும், 'எம்மை ஆள வந்தீரோ' என்று அரசி கேட்டபடிக்கே, ஆளவந்தார் என்றான, யாமுனாசார்யர் என்றும், யமுனைத்துறைவன் என்றழைக்கப்படும் வைணவ ஆசார்யனின் சிறு பருவத்துக் கதை இது.

திவ்யப் பிரபந்தமான நாலாயிரத்தையும் தேடிக் கண்டெடுத்து, இசை கூட்டி அருளிச் செய்த ஸ்ரீமன் நாத முநிகளுடைய பேரன் இவரே! ஆமுதல்வன் என்றும், இளையாழ்வான் என்றும் அழைக்கப் பட்ட ராமானுஜர் தன்னிடத்திலே மடிப்பாலாய்க் கனத்துக் கொண்டிருந்த ஞானத்தைப் பருக இன்னமும் வரவில்லையே,என்று ஒவ்வொரு பொழுதும் தவித்துக் கொண்டிருந்த, ஆசார்ய பரம்பரையின் நடுமத்தியில் வைத்துப் போற்றப்படும் புண்ணிய புருஷன்!

"லக்ஷ்மீநாத ஸமாரம்பாம் நாத யாமுன மத்யமாம் " என்று குருபரம்பரைத் தனியன் இவரை வணங்குகிறது.

ந தர்ம நிஷ்டோஸ்மி ந சாத்ம வேதிந பக்திமான் த்வச்சரணாரவிந்தேஅகிஞ்சானோனான்யகதி: சரண்ய!
த்வத் பாதமூலம் சரணம் ப்ரபத்யே!! நான் தர்மத்தை அறிந்தவனல்லன். அன்றி தன்னையறிந்தவனுமல்லன். உன்னுடைய பாதகமலங்களை சரணடைந்த பக்தனுமல்லன். வேறொன்றுமறியாது உன்னை சரணடைவதே கதியென்றெண்ணி உன் பாதங்களில் சரணடைகிறேன்.
- ஆளவந்தார் அருளியது
Admin
Admin
Admin

Posts : 90
Join date : 2009-10-05
Age : 33

http://inthu.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum