இந்துசமயம்

தாய்மை என்பது அன்பே! வாழ்க்கை என்பதும் அன்பே! மாதா அமிர்தானந்தமயி அருளுரை

Go down

தாய்மை என்பது அன்பே! வாழ்க்கை என்பதும் அன்பே!   மாதா அமிர்தானந்தமயி அருளுரை Empty தாய்மை என்பது அன்பே! வாழ்க்கை என்பதும் அன்பே! மாதா அமிர்தானந்தமயி அருளுரை

Post by Admin on Sun Feb 07, 2010 2:34 pm

(ஜெய்ப்பூரில் 2008 மார்ச் 7ஆம் தேதி அகில உலக அமைதியின் தொடக்கத்திற்கான பெண்கள் மாநாட்டில் அம்மா ஆற்றிய அருளுரை)

இறந்த காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் இடையில் நிகழும் போராட்டத்தையே இன்று நாம் காண்கிறோம். இதில் விட்டுக்கொடுக்க முன்வராத ஆண்குலம் கடந்த காலத்தின் அடையாளமாகும். மலர்ந்து மணம் வீசும் அழகிய மலரைப் போல் எதிர்காலம் இருக்க வேண்டுமானால், அனைத்துத் துறைகளிலும் ஆணும் பெண்ணும் கைகோர்த்துச் செல்ல வேண்டும். உலகின் நன்மையும், அமைதியும் நிலவ வேண்டும் என்று விரும்புபவர்கள் எதிர்காலத்தை நினைத்து வாழவேண்டும். அதேசமயம், எதிர்காலம் அழகு நிறைந்ததாக ஆக வேண்டுமெனில், இப்போது இந்த நிமிடத்தில் கவனம் செலுத்த வேண்டும். அதற்கு, இந்த நிகழ்காலத்தில் ஆண்-பெண் இருவரின் மனம், புத்தி ஆகியவை ஒன்றாக இணைய வேண்டும். இனியும் தாமதிக்க நேரமில்லை. காலதாமதம் செய்யச் செய்ய உலகின் நிலை மோசமாகிக் கொண்டே இருக்கும்.

FILE
ஆணும் பெண்ணும் இணைந்து செயல்புரிந்து, ஆரோக்கியமான அரசை நிறுவ முடியும். ஆனால் இதற்கு பரஸ்பரம் புரிந்துகொள்ளும் தன்மையும், திறந்த மனதுடன் கூடிய பேச்சுவார்த்தையும் அவசியமாகும். பாம்பின் விஷம் மரணத்திற்குக் காரணமாகும். ஆனால், அதே விஷத்தை மருந்தாக்கி ஒரு ஆளின் உயிரைக் காக்கலாம். அதேபோல், நம்முடைய தீய எண்ணங்களை நல்ல எண்ணங்களாக மாற்றினால், நம்மால் சமூகத்தைக் காக்க முடியும். அன்பு ஒன்றால் தான் தீய எண்ணங்களாகும் விஷத்தை அமிர்தமாக மாற்ற முடியும்.

அன்பு உணர்வு பொதுவாக எல்லா உயிரினங்களிடமும் காணப்படுகிறது. ஆணைப் பெண் அடையவும், பெண்ணை ஆண் அடையவும் அன்பே வழியாகும். ஆண்-பெண் இருவரும் இயற்கையை அடையவும், அதற்கும் மேலாக இப்பிரபஞ்சத்தை அடையவும் அன்பே வழியாகும். எல்லைகள் அனைத்தையும் கடந்து அன்பு பெருகும் போது, அது உலகையே அரவணைக்கும் தாய்மையாக ஆகிறது.

இவ்வுலகில் மகிமை பொருந்திய மலர் அன்பு மலராகும். மிகச்சிறிய செடியிலிருந்து மிக அழகான, மனதைக் கவரும் நிறமுள்ள, இனிய மணம் நிறைந்த மலர் இயல்பாக மலர்கிறது. இதைப்போல், மனித இதயங்களில் அன்பு மொட்டாகி, மலர்ந்து, மணம் பரப்ப வேண்டும். ஆண்-பெண் இருவரும் இந்த அன்பு மலர் தங்கள் இதயங்களில் மலர அனுமதிக்க வேண்டும்.

இரண்டு இதயங்கள் ஒன்றை ஒன்று நேசிப்பதை விட ஆழமான சக்தியோ, அழகோ வேறு எதுவும் இல்லை. மனதைக் குளிரச் செய்யும் முழு நிலவின் குளிர்ச்சியும், சூரியக் கதிர்களின் பிரகாசமும் அன்பிற்கு உண்டு. ஆனால், அன்பானது அனுமதியின்றி நம் இதயத்திற்குள் நுழையாது. இதய வாயிலில் காத்திருக்கும் அன்புக்கு அழைப்பு விடுக்க ஆண்-பெண் இருவரும் முன்வர வேண்டும். அன்பு ஒன்றால் மட்டுமே ஆண்-பெண்ணின் சிந்தனை போக்கிலும், உலகிலும் நிலையான மாற்றத்தைக் கொண்டுவர முடியும்.

கணவன்-மனைவியர் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு வாழ்ந்தால், இருவருக்குமிடையில் இப்போது தினமும் அதிகரித்துவரும் இடைவெளி குறையும். இதன் மூலம் சமூகத்தில் ஏற்படும் பிரச்சனைகளும் ஓரளவு தீரும். இக்காலத்தில், தம்பதிகள் பிறரை ஏமாற்றுவதற்காகவும், சமூகத்தை நம்பச் செய்வதற்காகவும், "நாங்கள் இருவரும் பரஸ்பர அன்பு மற்றும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்" என்று சொல்கிறார்கள். இது அன்பாக இருப்பதாக நடிப்பதாகும். அன்பு என்பது நடிப்பதோ, கபடத்தனமோ அல்ல. அது வாழ்வாகும். அதுவே வாழ்க்கை.
நடிப்பு என்பது முகமூடியாகும். அதை யார் அணிந்தாலும் அதை எடுத்து மாற்ற நேரிடும். இல்லாவிடில், காலம் அதை மாற்ற வைக்கும். கதாபாத்திரத்தின் அவசியத்திற்கு ஏற்ப முகமூடியை மாற்றுவார்கள். வேறு சிலர் சிறிது காலத்திற்குப் பிறகு மாற்றுவார்கள். இந்த வித்தியாசம் மட்டுமே உள்ளது.

மனிதனின் சொரூபமும், சுயதர்மமுமான அன்பு வெறும் முகமூடியாக மாறியது எங்ஙனம்? பணிவும், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும் இல்லாமல் மனிதன் சீர்கெடும் போதுதான் அன்பு முகமூடி ஆகிறது. உதாரணமாக, தெளிவான நீர்நிறைந்த நதிக் கரைக்குச் சென்று சும்மா பார்த்துக்கொண்டு நின்றால் தாகம் தீருமா? தாகம் தீரவேண்டுமெனில், ஒருவன் குனிந்து நீரை அள்ளிப் பருக வேண்டும். இவ்வாறு செய்யாமல், சும்மா நின்றவாறு நதியைக் குறை கூறுவதால், என்ன பயன்? அதுபோல், எளிமையே அன்பெனும் தெளிவான நீரை மனதிற்குள் நிறைக்கிறது.

இக்கால கணவன்-மனைவியர் உளவுத்துறையைப் போல் நடந்து கொள்கின்றனர். எதைக் கண்டாலும், கேட்டாலும் அவர்களுக்கு சந்தேகம். ஆயுளையும், ஆரோக்கியத்தையும் அரித்துத் தின்னும் "சந்தேகம்" ஒரு பெரிய நோயாகும். இந்நோயால் பாதிக்கப்பட்டால் ஒருவர் மற்றவரின் பிரச்சனைகளை அனுதாபத்துடன் கேட்கும் பொறுமையை இழந்துவிடுவார்கள்.

இப்படியெல்லாம் இருந்தபோதும் அன்பு நமக்கு முற்றிலும் நட்டமாகிவிடவில்லை. அன்பு அழிந்துவிட்டால் இவ்வுலகே அழிந்துவிடும். ஒருநாளும் அழியாத அன்பெனும் நெருப்பு அனைவருக்குள்ளும் உள்ளது. அதை நாம் சிறிது ஊதினால் போதும், அது நன்கு எரிய ஆரம்பிக்கும்.

அபூர்மான உயிரினங்கள் பல பூமியிலிந்து அடியோடு மறைந்துவிட்டன. அதுபோல், மனித மனங்களிலிருந்து அன்பும் மறைந்துவிடுமா? இவ்விதம் நிகழாமல் இருப்பதற்கு, புலன்களுக்கு அப்பாற்பட்ட தெய்வீக சக்தியின் மீது நம்பிக்கை வைத்து, அதை வழிபடுவதற்கு மனிதன் முன்வர வேண்டும். அந்த சக்தி வெளியில் இல்லை, நம்முள்ளே தான் இருக்கிறது என்பதை அறிவதற்கு நமது கண்ணோட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.

உதாரணமாக, ஒரு புத்தகத்தைப் படிக்கும்போது நாம் அதில் எழுதப்பட்டுள்ள எழுத்தை மட்டுமே காண்கிறோம். எழுத்துகள் தெளிவாக அச்சடிக்கப்பட்டிருக்கும் காகிதத்தை நாம் காண்பதில்லை. அந்த எழுத்துகள் தெளிவாகத் தெரிவதற்கு காகிதமே ஆதாரமாகும்.

இதைப் பரிசோதனை செய்து பார்க்கலாம். ஒரு வெள்ளைக் காகிதத்தின் நடுவில் கருப்பு மையால் ஒரு புள்ளி வைக்கவும். அதன்பிறகு அந்த காகிதத்தைப் பலரிடம் காண்பித்து, "நீங்கள் என்ன காண்கிறீர்கள்?" என்று கேளுங்கள். பெரும்பாலோர், "நான் ஒரு கருப்புப் புள்ளியைக் காண்கிறேன்" என்றே பதிலளிப்பார்கள். மிகச்சிலரே, "ஒரு வெள்ளைக் காகிதத்தின் நடுவின் கருப்புப் புள்ளியைக் காண்கிறேன்" என்று பதிலளிப்பார்கள்.

இன்றை மனிதகுலம் இப்படித்தான் இருக்கிறது. அன்புதான் வாழ்வின் அடிப்படை என்பதை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. அது நமக்கு சாத்தியமாக வேண்டும். நாம் படிக்கும்போது, நிச்சயமாக நம்மால் எழுத்துகளைப் பார்க்க முடிகிறது. இருப்பினும், படிக்கும்போது, எழுத்துகளுக்கு ஆதாரமாக இருப்பது காகிதமே என்பதைப் புரிந்துகொள்ள நமக்கு இயல வேண்டும்.

_________________
இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க
Admin
Admin
Admin

Posts : 90
Join date : 2009-10-05
Age : 33

http://inthu.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum