இந்துசமயம்


Join the forum, it's quick and easy

இந்துசமயம்
இந்துசமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

இராமாயணம் வரலாறு

Go down

இராமாயணம் வரலாறு Empty இராமாயணம் வரலாறு

Post by அச்சலா Wed Sep 11, 2013 12:24 pm

இராமாயணம் வால்மீகி என்னும் முனிவரால் சமசுக்கிருத மொழியில் இயற்றப்பட்ட மிகப் பழைய இதிகாசமாகும்[1]. இது கிமு 400க்கும் கிபி 200 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் இயற்றப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. இது இந்து சமயத்தின் முக்கியமான நூல்களுள் ஒன்று. மூல நூலான வால்மீகியின் இராமாயணத்தைத் தழுவிப் பல இந்திய மொழிகளிலும், பிற நாடுகளின் மொழிகளிலும் இராமாயணம் இயற்றப்பட்டுள்ளது. கம்பர் என்னும் புலவர் இதனைத் தமிழில் எழுதினார். இது கம்ப இராமாயணம் எனப்படுகின்றது. கெமர் மொழியில் உள்ள ரீம்கெர், தாய் மொழியில் உள்ள ராமகியென், லாவோ மொழியில் எழுதப்பட்ட ப்ரா லாக் ப்ரா லாம், மலாய் மொழியின் இக்காயத் சேரி ராமா போன்றவை வால்மீகியின் இராமாயணத்தைத் தழுவியவை ஆகும். கோசல நாட்டின் தலை நகரமான அயோத்தியைச் சேர்ந்த ரகு வம்ச இளவரசரான ராமர், அவர் மனைவி சீதை ஆகியோரின் வாழ்க்கையை விவரிக்கும் இந்த இதிகாசம், உறவுகளுக்கு இடையேயான கடமைகளை எடுத்துக் காட்டுகின்றது. சிறந்த வேலையாள், சிறந்த தம்பி, சிறந்த மனைவி, சிறந்த அரசன் போன்றோர் எப்படி இருக்கவேண்டும் என்பது இதன் கதை மாந்தர்கள் மூலம் விளக்கப்படுகின்றது.

இராமாயணம் என்னும் பெயர் இராமன், அயனம் என்னும் சொற்களின் கூட்டாகும். அயனம் என்னும் சொல் சமசுக்கிருதத்தில் பயணம் என்னும் பொருளுடையது. இதனால், இராமாயணம் என்பது இராமனின் பயணம் என்னும் பொருள் குறிக்கிறது.

இந்திய மொழிகளில் இராமாயணம்:


தமிழில் கம்பரும், வடமொழியில் வால்மீகியும், இந்தியில் துளசி தாசரும், மலையாளத்தில் எழுத்தச்சனும், அசாமியில் மாதவ் கங்குனியும், ஒரியாவில் பலராம்தாசுவும் இயற்றியுள்ளனர்.

வால்மீகி இராமாயணத்தின் அமைப்பு:


இராமாயணத்தின் கதை பல மட்டங்களில் தொழிற்படுகின்றது. ஒரு மட்டத்தில் இது அக்காலத்துச் சமூகத்தை விவரிக்கின்றது. பரந்த பேரரசுகள், அடுத்த அரசர்களாக வரவிருக்கும் இளவரசர்களின் வாழ்க்கை, தாய்மாருக்கும் மாற்றாந் தாய்களுக்கும் இடையிலான போட்டி, உடன்பிறந்தோருக்கு இடையிலான அன்புப் பிணைப்பும் விசுவாசமும், இளவரசிகளை மணம் முடிப்பதற்கான போட்டிகள் போன்றவை இவற்றுள் அடக்கம். இன்னொரு மட்டத்தில் இது, நெறிமுறைகளைக் கடைப்பிடிக்கும் ஒரு மனிதன், ஒரு தலைவனாக எவ்வாறு நடந்துகொள்கிறான் என்பதையும், நிலைமைகளை ஒன்றுபோல எதிர்கொண்டு, சமயத்துக்குத் தக்கபடி நடந்து, தனது சொந்தத் துன்பங்கள் முதலியனவற்றுக்கும் அப்பால் குடிமக்களை எவ்வாறு வழிநடத்துகிறான் என்பதையும் காட்டுகிறது. வேறொரு மட்டத்தில் இது, தீமையை ஒழித்து நீதியை நிலை நாட்டுவதற்காக மனிதனாகத் தனது ஏழாவது அவதாரத்தை எடுத்த திருமாலின் கதையும் ஆகும்.

வால்மீகி இராமாயணம் 24,000 பாடல்களைக் கொண்டது. இவை மொத்தம் ஏழு காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவை இராமரின் பிறப்பில் இருந்து இறப்பு வரை விளக்குகின்றன. அவை:
1.பால காண்டம்: இராமனினதும் உடன்பிறந்தோரினதும் பிறப்பு, கல்வி, திருமணம் என்பவை பற்றிய கதைப் பகுதி.
2.அயோத்தி காண்டம்: இராமன் சீதையை மணந்து கொண்டபின்னர் இளவரசனாக அயோத்தியில் வாழ்ந்த காலத்துக் கதைப் பகுதி.
3.ஆரண்ய காண்டம்: இராமன் காட்டுக்குச் சென்றதும், அங்கு வாழ்ந்ததும்.
4.கிஷ்கிந்தா காண்டம்: கடத்திச் செல்லப்பட்ட சீதையைத் தேடிச் செல்லும்போது வானரர் நாட்டில் இராமனது வாழ்க்கை.
5.சுந்தர காண்டம்: சீதையைத் தேடி அனுமன் இலங்கைக்குச் சென்றது, அங்கே சீதையைக் கண்டது ஆகியவற்றை உள்ளடக்கிய கதைப் பகுதி.
6.யுத்த காண்டம்: இராமனுக்கும் இராவணனுக்கும் இடையிலான போரை உள்ளடக்கிய கதைப் பகுதி.
7.உத்தர காண்டம்: இராமன் அயோத்திக்கு மீண்டு அரசனானதும், சீதை மீண்டும் காட்டுக்கு அனுப்பப்பட்டதையும் உள்ளடக்கிய கதைப் பகுதி.

இந்த இராமாயணத்தில் காணப்படும் முதல் காண்டமும், இறுதிக் காண்டமும் வால்மீகியால் எழுதப்பட்டதா என்பதில் சில ஐயப்பாடுகளும் நிலவுகின்றன. இவ்விரு பகுதிகளினதும் மொழி நடை ஏனைய பகுதிகளிலிருந்து வேறுபடுவதும், அவற்றின் உள்ளடக்கங்களில் முரண்பாடுகள் காணப்படுவதும் இத்தகைய ஐயப்பாடுகளுக்குக் காரணமாகும். எனினும் பலர் இவ்வேழு காண்டங்களும் வால்மீகியால் எழுதப்பட்டதாகவே நம்புகின்றனர்.

வால்மீகி இராமாயணத்தின் கதை சுருக்கம்

பால காண்டம்

அயோத்தியை ஆண்டு வந்த தசரத மன்னனுக்கு நீண்ட நாட்களாக குழந்தைகள் இல்லாமல் இருந்து வந்தார். அதனால் தன் மந்திரி சுமந்தரர் மற்றும் தன் குலகுருவான வசிட்டரின் அறிவுரைப்படி புத்திர-காமேஷ்டி யாகம் நடத்தினார். அப்போது மகா விஷ்ணு தோன்றி, ஓர் தங்கத்திலான பாத்திரத்தை தசரதனிடம் கொடுத்து அதிலிருக்கும் புனிதமான தேனைத் தசரதனின் மனைவியரை பருகும்படி கேட்டு கொண்டார். அதன்படி தசரதரும் தன் மனைவியரான கௌசல்யா, சுமித்திரா மற்றும் கைகேயியிடம் அந்த தேனை பகிர்ந்தளிதார். விரைவிலேயே கௌசல்யாவுக்கு இராமனும், கைகேயிக்கு பரதனும், சுமித்திராவுக்கு இரட்டையரான லட்சுமணன் மற்றும் சத்ருகனன் ஆகியோர் பிறந்தனர்.

சிறிது காலத்திற்கு பின்பு நால்வரும் வசிட்டரிடம் சீடர்களாக சேர்ந்து பல்வேறு கலைகளை கற்று கொள்ள ஆரம்பித்தனர். இந்நிலையில் விசுவாமித்திர முனிவர், அயோத்தியை அடைந்து தசரதரிடம் தன் யாகங்களுக்கு சில ராட்சகர்களால் இடையூறு ஏற்படுவதால் அவர்களை அழிக்க இராமனை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டார். முதலில் தயங்கினாலும் பிறகு இராமனையும், லட்சுமணனனையும் அவருடன் அனுப்பி வைத்தார். சகோதரர்கள் வந்த வேலையை செவ்வனே செய்த்தால், விசுவாமித்திரர் அவர்களுக்கு சில அஸ்திரங்களை அருளி ஆசிர்வதித்தார்.

அயோத்தி காண்டம்:





கருநாடகத்தின் நாட்டுப்புறக் கலையான யக்சங்கன என்னும் இசைநாடகத்தில் வரும் அனுமன்.
விசுவாமித்திரர் இராமனையும், இலட்சுமணனையும் ஜனகன் என்னும் அரசன் ஆட்சி செய்த விதேக நாட்டின் தலைநகரமான மிதிலைக்கு அழைத்துச் சென்றார். ஜனகனுடைய மகள் சீதை. இவளுக்குத் திருமணம் செய்வதற்காக அரசர் போட்டியொன்றை ஒழுங்கு செய்திருந்தார். பல இளவரசர்கள் கலந்து கொண்ட இப் போட்டியில் வென்ற இராமன், சீதையையும் அழைத்துக்கொண்டு அயோத்திக்கு மீண்டான்.

அரண்ய காண்டம்:

சில காலத்தின் பின் தனது மூத்த மகனான இராமனுக்கு முடிசூட்டத் தசரதர் எண்ணினார். அரச குடும்பத்தினரும் மக்களும் இது குறித்து மிகவும் மகிழ்ந்தனர். ஆனால், கைகேயியின் பணிப்பெண்களில் ஒருத்தியான கூனி என்பாள் இராமன் மீது வெறுப்புற்றிருந்தாள். இராமன் அரசனாவதை அவள் விரும்பவில்லை. அதனால், கைகேயியைத் தூண்டி விட்டு இராமன் அரசனாவதைத் தடுக்க எண்ணினாள். கைகேயியும் கூனியின் வலையில் விழுந்துவிட்டாள். முன்னொருபோது தசரதனின் உயிரைக் கைகேயி காத்தமைக்காக இரண்டு வரங்கள் தருவதாகத் தசரதன் வாக்களித்திருந்தான். அவ்விரு வரங்களையும் கேட்டு வாங்கும்படி கூனி கைகேயிக்கு ஆலோசனை கூறினாள். தனது மகனான பரதன் அரசனாக வேண்டும், இராமன் பதினான்கு ஆண்டுகள் காட்டில் வாழவேண்டும் என்னும் இரண்டு வரங்களைக் கைகேயி தசரதரிடம் கேட்டாள். மனதை மாற்றிக்கொள்ளும்படி தசரதர் வேண்டியும் கைகேயி பிடிவாதமாக மறுத்துவிட்டதனால், தான் சொன்ன சொல்லைக் காப்பாற்றுவதற்காக வேறு வழியின்றி அவளுடைய கோரிக்கைக்குத் தசரதன் இணங்க வேண்டியதாயிற்று. தசரதரின் முடிவைக் கேள்வியுற்ற இராமன் உடனடியாகவே காட்டுக்குக் கிளம்பினான். அவன் தடுத்தும் கேளாமல் சீதையும், இலட்சுமணனும் இராமனுடன் காட்டுக்குக் கிளம்பினர். இராமன் காட்டுக்குப் போய்விட்டான் என்பதைக் கேள்வியுற்ற தசரதர் கவலை தாங்காமல் உடனேயே இறந்துவிட்டார். அவ்வேளையில் பரதனும், சத்துருக்கனும் நாட்டுக்கு வெளியே இருந்தனர். தந்தையின் இறப்புச் செய்தி கேள்வியுற்ற அவர்கள் உடனடியாக நாடு திரும்பி நடந்ததை அறிந்து கொண்டனர்.

நடந்தவை அனைத்துக்கும் தனது தாயே காரணம் என்பதை அறிந்த பரதன் கோபம் கொண்டான். முடி சூட்டிக்கொள்ள மறுத்த அவன் இராமனைத் திரும்பவும் கூட்டி வருவதற்காகக் காட்டுக்குச் சென்றான். தந்தையின் சொல்லைக் காப்பாற்றுவதற்காக அயோத்திக்கு வர இராமன் மறுக்கவே, பரதன் இராமனின் காலணிகளை கேட்டுப் பெற்றுக்கொண்டு அயோத்திக்குச் சென்றான். அங்கே இராமனின் பாதுகைகளை அரியணையில் வைத்து இராமன் காட்டிலிருந்து மீளும் வரை அவனுக்காகப் பரதன் ஆட்சியை நடத்தினான்.

இராமனும், சீதையும், இலட்சுமணனும் காட்டில் வாழ்ந்து வந்தபோது அரக்கர் குலத்தைச் சேர்ந்த இலங்கை அரசன் இராவணனின் தங்கையான சூர்ப்பனகை என்பவள் இராமன் மீது ஆசை கொண்டாள். இலட்சுமணன் அவளது மூக்கை வெட்டித் துரத்திவிட்டான். இதனால் கோபமடைந்த அவள் தனது அண்ணனிடம் முறையிட்டாள். தனது தங்கைக்கு நேர்ந்த நிலையையிட்டுச் சினம் கொண்ட இராவணன் இராமனைப் பழிவாங்க எண்ணிச் சீதையைக் கவர்ந்து கொண்டு வந்து இலங்கையில், அசோகவனத்தில் சிறை வைத்தான். சீதையில் அழகில் மயங்கிய அவன், தன்னை மணந்து கொள்ளுமாறும் அவளை வற்புறுத்தினான்.

கிஷ்கிந்தா காண்டம்:

சீதையைத் தேடி அலைந்த இராமனுக்கும், இலட்சுமணனுக்கும் வானரர்களின் அரசனான சுக்கிரீவனின் நட்புக் கிடைத்தது. சுக்கிரீவனின் அமைச்சனும், காற்றுக் கடவுளின் மகனுமான அனுமன் இராமனிடம் பெரும் பக்தி கொண்டிருந்தான். சுக்கிரீவனின் ஆணைப்படி வானரப் படைகள் பல திசைகளிலும் சென்று சீதையைத் தேடின. அனுமன் கடலைத் தாண்டி இலங்கைக்குச் சென்றான். அங்கே அசோக வனத்தில் சிறையிருந்த சீதையைக் கண்டான்.





இராமனும், சீதையும் அமர்ந்திருக்கின்றனர். அருகின் இலட்சுமணன் நிற்க, அனுமன் இராமனை வழிபடும் காட்சி.
அனுமன் மூலம் சீதை இருக்கும் இடத்தை அறிந்து கொண்ட இராமன், வானரப் படைகளின் உதவியோடு இலங்கைக்குச் சென்றான். இராவணனின் தம்பியான விபீடணன், சீதையை விட்டுவிடுமாறு இராவணனுக்கு ஆலோசனை கூறியும் அவன் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டான். நியாயத்துக்கு எதிராக இராவணனுக்கு உதவ விரும்பாத விபீடணன் இராமனை அடைந்து அவனுக்கு உதவினான். இடம்பெற்ற போரில் இராவணனும், அவனது கூட்டத்தினரும் மாண்டனர். இராமன் விபீடணனை இலங்கை அரசனாக முடி சூட்டினான். இராமன் சீதையை மீட்டான். எனினும், சீதையின் தூய்மையை நிரூபிப்பதற்காக சீதை தீக்குள் புகுந்து வெளிவர வேண்டியதாயிற்று. இவ்வேளையில் இராமனுக்கு விதிக்கப்பட்ட நாடுகடந்த வாழ்க்கைக் காலமான பதினான்கு ஆண்டுகள் முடிவடைந்தன. இராமன், சீதை, இலட்சுமணன் ஆகியோர் அயோத்திக்கு மீண்டனர். இராமன் அரசனாக முடிசூட்டிக் கொண்டான்.

ஒருநாள் அயோத்தியின் குடிமக்களில் ஒருவன், சீதை இராவணனால் கடத்திச் செல்லப்பட்டதைக் குறித்து ஐயுற்றுப் பேசியதை அறிந்த இராமன் சீதையைக் காட்டுக்கு அனுப்பினான். அப்போது சீதை கருவுற்றிருந்தாள். காட்டில் சீதை வால்மீகி முனிவரின் ஆதரவில் வாழ்ந்து வந்தாள். அவளுக்கு லவன், குசன் என இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தனர். அவர்கள் வால்மீகியின் ஆசிரமத்திலேயே வளர்ந்தனர்.

அக்காலத்தில் இராமன் தனது பேரரசை மேலும் பெருப்பிக்கும் நோக்குடன் அசுவமேத யாகம் எனப்பட்ட யாகத்தை ஒழுங்கு செய்தான். இந்த யாகத்தைச் செய்யும் ஒரு மன்னன் ஒரு குதிரையைப் பெரும் படையோடு அண்டை நாடுகளுக்கு அனுப்புவான். அவனுடன் போரிடமுடியாமல் அடிபணிய விரும்பும் அரசர்கள் அக் குதிரையைத் தமது நாட்டில் உலவ விடுவர். அப்படியின்றி அவ்வரசன் அடிபணிய விரும்பாவிட்டால் குதிரையைப் பிடித்துக் கட்டிவிடுவான். குதிரையை அனுப்பிய அரசன் போர் புரிந்து குறிப்பிட்ட நாட்டைத் தோற்கடிக்கவேண்டும். இராமன் அனுப்பிய குதிரை அவனது பிள்ளைகளான லவனும், குசனும் வாழ்ந்த காட்டில் உலவியபோது அவர்கள் அதனைப் பிடித்துக் கட்டியதுடன், அதனுடன் வந்த படையினருடன் மோதி அவர்களைத் தோற்கடித்தனர். இதைக் கேள்வியுற்ற இராமன் காட்டுக்கு வந்து தனது பிள்ளைகளையும், சீதையையும் கண்டான். சில காலத்தின் பின் புவியில் தனது காலம் முடிவுக்கு வருவதை சீதை உணர்ந்து தன்னை ஏற்றுக்கொள்ளும்படி புவியன்னையை வேண்டினாள். சீதையின் வேண்டுகோளுக்கு இணங்கிப் புவி பிளந்து அவளை ஏற்றுக்கொண்டது. லவனும், குசனும் அயோத்திக்குச் சென்று தந்தையுடன் வாழ்ந்தனர்.

இறையியல் முக்கியத்துவம்:

இராமாயணத்தின் முக்கிய கதை மாந்தனான இராமன், இந்துக்களின் முதன்மைக் கடவுளரில் ஒருவர். மும்மூர்த்திகளுள் ஒருவரான திருமாலின் 10 அவதாரங்களுள் ஒருவராகப் போற்றி வழிபடப்படுபவர். உலகில் தீமையை ஒழித்து அறத்தை நிலைநாட்டுவதற்காக திருமால் இப் புவியில் தோன்றியதாக இந்துக்கள் நம்புகின்றனர். ஆண்டு தோறும் பலர் இராமர் பயணம் செய்த பாதையைப் பின்பற்றி யாத்திரை செய்கின்றனர். இந்த இதிகாசம், ஒரு இலக்கியமாக மட்டுமன்றி, இந்து சமயத்துடன் இரண்டறக் கலந்துள்ளது. இதனைப் படிப்பவர்களதும், படிக்கக் கேட்பவர்களதும் பாவங்கள் நீங்கி, இறைவன் அருள் கிட்டும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

திராவிட இயக்கமும், இராமாயணமும்:

தமிழ் நாட்டில் திராவிட இயக்கத்தினர், இராமாயணத்தைத் திராவிடர்கள் மீது ஆரியர்களின் மேலாதிக்கத்தின் சின்னமாகப் பார்த்தனர். இவர்களது கருத்துப்படி இராம இராவணப் போர் திராவிடர்களுக்கும், அவர்களை அடக்கியாள விழைந்த ஆரியர்களுக்கும் இடையிலான போராட்டமாகும். சிவனை வணங்கியவனான இராவணன் திராவிடன் எனவும், ஆரியர்கள் அவனையும் அவனைச் சார்ந்தோரையும் அரக்கர்கள் எனக்கூறி இழிவு படுத்தினர் என்பதும் அவர்கள் கருத்து. வால்மீகியால் அறவழியில் நின்று அண்ணனான இராவணனை எதிர்த்தான் எனக் கூறப்படும் விபீடணனைத் திராவிட இயக்கத்தினர், திராவிடரைக் காட்டிக்கொடுத்த துரோகி என்றனர். ஆனால் மாற்‍றான் மனைவியை அபகரிப்பதைப் பற்‍றியோ, காட்டில் வாழும் முனிவர்களைத் துன்புறுத்துவதைப் பற்‍றியோ ஒன்றும் கூறவில்லை.

இராமாயணமும் இலங்கையும்:

இராமாயணத்தில் கூறப்படும் இலங்கை இன்றைய இலங்கைத் தீவைக் குறிக்கிறது என்பதே பெரும்பாலோரது கருத்து. எனினும், இதை மறுத்து இந்தியாவிலேயே உள்ள வேறு இடங்களை இராமாயணத்தின் இலங்கையாகக் கொள்பவர்களும் உள்ளனர். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் காணப்படுவனவும், இராமர் பாலம் என்று அழைக்கப்படுவனவுமான ஆழம் குறைந்த திட்டுக்களே வானரப் படைகளால் அமைக்கப்பட்ட பாலம் எனச் சிலர் கருதுகின்றனர். அத்துடன் இலங்கையின் மையப் பகுதியில், நுவரெலியா என்னும் நகருக்கு அண்மையில் உள்ள சீதா எலிய என அழைக்கப்படும் இடமே சீதையைச் சிறைவைத்த அசோகவனம் என்கின்றனர். இவை எல்லாவற்றையும் விட, இராமாயணம் என்பது கட்டுக்கதையே எனக் கூறுவாரும் உள்ளனர்.

இராமாயண அவையடக்கம்:


சோழ அரசனின் ஆணைப்படி கம்பரால் இயற்றப்பட்டது கம்பராமாயணம். இதனைக் கம்பர் வான்மீகி முனிவரின் இராமாயணத்தின்படி எழுதியிருக்கின்றார். அதனை அவர் தனது இராமாயண அவையடக்கத்தில் பின்வருமாறு கூறுகின்றார் -

“தேவபாடையின் இக்கதை செய்தவர்
மூவரானவர் தம்முளும் முந்திய
நாவினார் உரைப்படி நான் தமிழ்ப்
பாவினால் இஃதுணர்த்திய பண்பரோ!“

வடமொழியில் இராம கதையை வகுத்து வான்புகழ் கொண்ட வான்மீகி முனிவரின்படி நான் தமிழ்ப்பாவினால் பாடியிருக்கின்றேன் என்று கம்பர் கூறுகின்றபோதும் - சிற்சில இடங்களில் அழகுசெய்வான் பொருட்டு வான்மீகி இராமாயணத்தில் இல்லாதவற்றையும் எழுதியிருக்கின்றார். இவை தமிழ் மக்களிடையே நிலவிய இராமயணக் கதைகளில் இருந்தும் சேர்ந்திருப்பதால், கம்பர் மெருகூட்டியவை முழுதும் அவரது கற்பனையே என்று ஊறு விட இயலாது.

உதாரணம் : இராமனும் சீதையும் திருமணத்திற்கு முன்னர் ஒருவரையொருவர் கண்டு கழிபெரும் காதல் கொண்டதாய் வான்மீகி கூறவில்லை. ஆயினும், கம்பர் தமிழ் மரபினைத் தழுவி, தலைவனும் தலைவியும் திருமணத்தின் முன்னர் ஒருவரையொருவர் கண்டு கழிபெருங் காதல் கொண்டதாய்ச் சொல்கிறார். தமிழியற் கொப்ப அவ்வாறு கூறியமை - முதனூலுக்கு மாறுகொள்ளக் கூறியமை - வழுவாகாத; மரபெனவே கொள்ளப்படுகிறது.

இராமாயணம் பாற்கடலிலிருந்து எழுந்தருளிய இராமனின் வரலாற்றைக் கூறுவதாய்க் கூறுகின்ற போதும், பெரியார் இராமாயண பாத்திரங்கள் போலியானதும் கற்பனைக் கெட்டாததும் என வாதிட்டு நூலொன்றை எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி:முகநூல்
அச்சலா
அச்சலா

Posts : 26
Join date : 2013-09-10
Age : 54
Location : தஞ்சை மாவட்டம்

http://athisayakavi.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum