இந்துசமயம்


Join the forum, it's quick and easy

இந்துசமயம்
இந்துசமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

யோகியின் அமைதி - ஸ்ரீ அரவிந்தர்

Go down

யோகியின் அமைதி - ஸ்ரீ அரவிந்தர் Empty யோகியின் அமைதி - ஸ்ரீ அரவிந்தர்

Post by Admin Sun Feb 07, 2010 2:27 pm

யோகியின் அமைதி - ஸ்ரீ அரவிந்தர் Img10910

நமது அறிவுக்கு எட்டாத மாபெரும் உலக நிகழ்ச்சிகளெல்லாம் உள்ளே ஆழ்ந்த, கம்பீரமான மோனத்தில் தங்களைப் பூரணப்படுத்திக் கொள்கின்றன. உள்ளே நடப்பதைத் தெரியவொட்டாத இரைச்சல் ஒலி மேற்பரப்பில் காணப்படுகிறது - மேலே சலசலக்கும் எண்ணற்ற அலைகள், கீழே ஆழங்காண முடியாத மாகடலின் திண்மை.

மனிதன் மேற்பரப்பிலுள்ள அலைகளையும் அவற்றின் குமுறலையும் ஆயிரம் ஓலங்களையும் காண்கிறான். அவற்றிலிருந்து வருங்காலத்தின் போக்கையும் இறைவனின் சித்தத்தையும் கணிக்கிறான்.

ஆனால் அவனுடைய கணிப்பு பத்தில் ஒன்பது தவறிவிடுகிறது. இதைக்கண்டுதான் மனித வரலாற்றில் எப்பொழுதும் எதிர்பாராதவைகளே நடக்கின்றன என்கிறார்கள்.

மேலெழுந்தவாரியான விஷயங்களைப் பார்க்காது விஷயங்களின் சத்தான அம்சத்தைக் காண அவர்கள் கற்றுக்கொண்டால், தோற்றங்களில் கவனம் செலுத்தாது ஆழ்ந்துசென்று உள்ளே மறைந்து கிடக்கும் உண்மையைக் காணும் பயிற்சிபெற்றல், வாழ்க்கையின் இரைச்சலுக்கு செவிசாய்க்காது அதன் மோனத்திற்கு செவிசாய்த்தல் அவை எதிர்பாராதவைகளாக இரா.

செயல்படுவதற்கு நாம் கடும் முயற்சி எடுக்கும்போது இயற்கை சக்திகள் தங்கள் விருப்பம்போல் நம்மை ஆட்டிப்படைக்கின்றன. நாம் அசைவற்ற மோன நிலையில் இருக்கும்போது அவை நமக்கு அடங்கி நிற்கின்றன. இது ஒரு இயற்கை விதி.

ஆனால் அசைவற்ற நிலையில் இருவகை உண்டு. உயிரற்ற மந்தச் சோம்பலிலிருந்து, தமோ குணத்திலிருநூது தோன்றுகிற, எதையும் செய்ய திறனில்லாத அசைவற்ற நிலை ஒன்று. அது அழிவுக்கு முன்னோடி. மற்றது அனைத்தையும் வெல்லும் ஆற்றலுடன் கூடிய அசைவற்ற நிலை. அதிலிருந்து பூரண வாழ்வு மலரும்.

யோகியின் அமைதி அனைத்தையும் வெல்லும் இந்த மோனமே. அமைதி பூரணமடைவதற்கேற்றபடி யோக சக்தியும் அதிகரிக்கும், செயலாற்றலும் அதிகரிக்கும்.

இந்த அமைதியிலேதான் உண்மையான ஞானம் தோன்றும். மனிதனின் சிந்தனை மெய்யும் பொய்யும் பின்னிய ஒன்று. மெய்ப்பார்வையின் மீது பொய்ப்பார்வையின் இருள் படிகின்றது; சரியான அளவிடுதலை தவறான அளவிடுதல் முடமாக்குகின்றது. சரியான ஞாபகத்தை தவறான ஞாபகம் ஏமாற்றுகின்றது.

மனத்தின் சலித்தல் நிற்கவேண்டும், சித்த சுத்தி ஏற்படவேண்டும். அப்பொழுது அலைபாயும் பிரகிருதி மீது ஒரு மோனம் இறங்குகின்றது. அந்த மோன அமைதியில் மனத்தில் ஞானோதயம் உண்டாகிறது. தவறு விலகத் தொடங்குகிறது.

மீண்டும் ஆசை துளிர்க்காவிடில், உணர்வின் மேல் மட்டத்தில் ஞானத் தெளிவு நிலைபெற்றுவிடும். அதன் ஆற்றலால் கீழ்மட்டத்தில் அமைதியும் இன்பமும் நிலவும். சரியான ஞானத்திலிருந்து பிழைபடாத சரியான செயல் எழும் - "யோகே கம்மேச கெளசலம்" - யோகம் செயல்களில் சிறந்தது.

யோகியின் ஞானம் சாதாரண ஆசைவயப்பட்ட மனத்தின் ஞானம் அன்று. அது அறிவியல் ஞானமோ உலகியல் ஞானமோ அல்ல. இவை மேற்பரப்பில் காணும் தூய மெய்மைகளின் (Facts) அடிப்படையிலும் முன் அனுபவங்களின் மீதும் நிற்பவை. இறைவனின் செயல்முறைகளை யோகி அறிவான்.

நாம் எதிர்பாராதவை அடிக்கடி நிகழ்கின்றன, தூல உண்மைகள் ஏமாற்றிவிடும் என்பதை அவன் உணர்ந்துள்ளான். அவன் பகுத்தறியும் மனத்திற்கு மேலே உள்ள நேரடியான ஒளிபெற்ற ஞானமாகிய விஞ்ஞானத்தை அடைகிறான்.


ஆவை வயப்பட்ட மனம் நன்மை தீமை, இன்பம் இன்பம், சுகம் துக்கம் என்னும் வலையில் சிக்கியுள்ளது. நன்மையானவை, இலாபமானவை நேர்ந்தால் பூரித்துப் போகிறது. அவற்றிற்கு எதிரிடையானவை நேர்ந்தால் குழம்பித் தவிக்கிறது.

ஆனால் யோகியின் ஞானக்கண் எல்லாம் நன்மையை நோக்கியே செல்கின்றன என்பதைக் காண்கிறது. எல்லாம் கடவுள்மயம், கடவுள் சர்வமங்களமானவன், பின் வேறெப்படி இருக்க முடியும்? தீமைபோல் தோன்றுவது நன்மைக்குக் குறுக்குப் பாதை என்பதும், இன்பத்தை உண்டாக்க துன்பம் இன்றியமையாதது என்பதும் துரதிஷ்டமானவை மூலமே அதிக பூரணமான சுகம் கிடைக்கும் என்பதும் அவனுக்குத் தெரியும். துவந்தங்களின் அடிமைத் தளையிலிருந்து அவனுடைய புத்தி விடுதலை பெற்றுவிட்டது.

ஆதலால் யோகியின் செயல் சாதாரண மனிதனின் செயலைப்போல் இராது. அவன் தீமைக்குப் பணிந்து போவதுபோலும், பிறர் துன்பங்களைத் துடைக்க முன்வராததுபோலும், ஹிம்சையையும் கொடுமையையும் எதிர்த்து நிற்கும் நல்லோர் முயற்சிக்கு ஆதரவு மறுப்பதுபோலும் தோன்றும். அவன் செயல் பேயன் செயலைப்போல தோன்றும். அல்லது, செயல் வேண்டுவதுபோல் தோன்றும் சமயங்களில் அவன் செயல்படாதிருப்பதையும், குரல் எழுப்பவேண்டும் என்று எல்லோரும் எதிர்பார்க்கும்போது மெளமாக இருப்பதையும் வெறிகொள்ளச்செய்யும் சம்பவங்கள் நடக்கும்போது எவ்வித உணர்ச்சியும் கட்டாதிருப்பதையும் காணும் மக்கள் அவனை வெறும் ஐடம் என்று கருதலாம். அவன் செய்யும் காரியங்களில் அவற்றிற்கு ஒரு குறியோ இலட்சியமோ இருப்பதாகத் தெரியாது. ஆகவே மக்கள் அவனை பைத்தியக்காரன் என்றும் மடையன் என்றும் இகழ்வார்கள்.

பிறருக்கு அல்லாத ஒரு ஒளியை - ஒரு வேளை அவர்கள் அதை இருள் என்றுகூடச் சொல்லலாம் - யோகி பின்பற்றிச் செல்கிறான். அவர்களுக்கு வெறும் கனவாக இருப்பது அவனுக்கு மெய்யாக இருக்கிறது, அவர்களுக்கு இரவாக இருப்பது அவனுக்குப் பகலாக இருக்கிறது. இந்த மாறுபாடுகளுக்கெல்லாம் மூல காரணம் அவர்கள் பகுத்தறிவு கொண்டு ஆராய்கிறார்கள், அவன் உண்மையை நேரே அறிகிறான்.

மோனம், அசைவற்ற நிலை (Stillness), ஒளிபொருந்திய செயலின்மை இவற்றைப் பெறுவது அமர நிலைக்குத் தகுதிச் சான்று பெறுவதாகும். அது தமோகுணத்தில் அழுந்தி மண்ணாங்கட்டிபோல் ஆகிவிடுதல் அன்று. அது தீரன் ஆவதாகும். அதுவே மநது பழம்பெரும் நாகரிகத்தின் இலட்சியம்.

தமோகுணத்தவனது செயலற்ற நிலை அவனைச் சுற்றிலும் செயல்படும் சக்திகளுக்குத் தடைக் கல்லாகும்; ஆனால் யோகியின் செயலின்மை படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில் புரியம். அவனுடைய செயல் மாபெரும் இயற்கைச் சக்திகளின் மகா செயல்வேகத்தைப் போல் நேரடியாக வேலை செய்வது, செயல் வீறு கொண்டது.

பெரும்பாலும் இந்த அசைவற்ற நிலை உள்ளே இருக்க, வெளியே பேச்சும் செயலும் சலசலக்கும் - ஆழ்கடலின் மேற்பரப்பில் அலைகள் கும்மாளமிடுவதுபோல். ஆனால் உலகின் மேற்பரப்பிலுள்ள இரைச்சலிலும் நடந்து மறைந்து கொண்டிருக்கும் நிகழ்ச்சிகளுக்கும் கீழே மறைந்திருக்கும் இறைவனின் செயல்களின் உண்மையை மக்கள் எவ்வாறு கண்டுகொள்வதில்லையே அவ்வாறே யோகியின் செயலையும் அவர்களால் புரிந்துகொள்ள முடியாது.

இரைச்சலின் பலமும் செயல்பாட்டின் (activity) பலமும் பெரிது என்பதில் சந்தேகமில்லை - இரைச்சலின் பலத்தால் ஜெரிகோவின் சுவர்கள் விழவில்லையா? ஆனால் செயலற்ற நிலையினுடைய சக்தியும், மோனத்தினுடைய சக்தியும் எல்லையற்றது, அவற்றில் மாபெரும் சக்திகள் செயலுக்கு ஆயத்தமாகின்றன.
Admin
Admin
Admin

Posts : 90
Join date : 2009-10-05
Age : 38

https://inthu.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum